செவ்வாய், 15 டிசம்பர், 2009

MANITHARGAL

லகில் நிறத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்காக பார்க்கிறார்கள் (பகுத்தறிவாளர்கள் சொல்லும் வர்ணங்கள் வேறு) கறுப்பு, வெளுப்பு, மஞ்சள், சிகப்பு என்று. மனிதனின் குணாதிசயங்களை அல்லது அவனது வாழ்க்கை முறைகளையும் கூட நான்காக பார்க்கலாம். பல மனிதர்களை பார்த்து பழகி பிறகு எடுத்த ஒரு முடிவின் தொகுப்பு இது என்று கூட வைத்து கொள்ளலாம். இந்த எனது கருத்தில் மாறுபடுபவர்கள் - தங்கள் கருத்துகளை பிறகு முன் வைக்கலாம்.

நான் பார்க்கும் அந்த நான்கு மனிதர்கள்...

முதலாவது... நீங்கள் சிலரை பார்த்து இருப்பீர்கள், எல்லா விஷயத்திலும் மிகச் சரியாக இருக்கும் மனிதர்களை. அவர்கள் தாங்கள் மட்டும் சரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பிறரும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். "நான் கரெக்டா இருக்கேன்ல நீயும் கரெக்டா இருக்கணும்" என்கிற கொள்கையோடு எல்லோரையும் அணுகுபவர்கள். உலகில் மிகச்சரியாக இருப்பவர்கள் மிக சொற்பமானவர்களே.

"ஒண்ணாந்தேதியாச்சுன்னா சம்பள காசை அப்படியே தர்றேன். சோறாக்க வலிக்குதா?" என்று மனைவியின் ஒரு நாள் தாமத சமையலுக்கு கோபப்பட்டு தட்டை வீசுபவர்கள். அவருக்கு கீழே பணி புரிபவர் ஒரு நாள் விடுமுறை போட்டால் போதும். அப்படியே டென்ஷனாகி, "காசு மட்டும் வாங்க தெரியுது. வேலை பார்க்கணும்னா உடம்பு வலிக்குதா?" என்று கத்தி தீர்ப்பார்கள். இவர்களுக்கு எல்லாவிதமான ப்ரஷ்ஷர்களும் வரும்.

"நான் கரெக்டா தானே இருக்கேன். அடுத்தவனும் கரெக்டா இருக்கிறது தானே நியாயம். எனக்கு மட்டும் ஏன் இப்படியாகுது?" என்று கேட்பார்கள். அவர்களின் கேள்வி நியாயமானது தான். ஆனால், உலகில் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. சரியாக ஒண்ணாம் தேதி கரண்ட் பில் கட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் கரண்ட் பில் கட்டலன்னு பீஸை பிடுங்க வரும் போது கட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

தான் பணிபுரியும் நிறுவனத்துக்காக உயிரை கொடுத்து வேலை பார்ப்பார்கள். ஒண்ணாம் தேதி ஒழுங்காக முதலாளி சம்பளத்தை தரா விட்டால் அவரையே அடித்தாலும் அடித்து விடுவார்கள். அவர்கள் நியாயமாய் இருக்கிறார்கள். நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள். நடக்காமல் போனால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பணம் செலவழித்து பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். மார்க் மட்டும் கம்மியாக வாங்கி விட்டால் பிள்ளையின் கதி அதோ கதி தான், "நான் சரியா இருக்கேன். கண்டிப்பா நீயும் சரியா இருக்கணும்."

"வாழ்க்கைன்னா முன்னப் பின்ன தாங்க இருக்க முடியும். எப்படிங்க எல்லா நேரத்துலயும் கரெக்டா இருக்க முடியும்," என்று யாராவது கேட்டால், "நான் கரெக்டா இருக்கேன்ல" என்று பதில் வரும். "நான் கரெக்டா இருக்கேன். நீயும் கரெக்டா இருந்தே ஆகணும். அது தான் நியாயம்." இது தான் முதல் ரக மனிதர்களின் குணாதிசயம்.

அடுத்து... இரண்டாம் ரக மனிதர்கள் யார் என்று பார்ப்போமா?

இவர்கள் பாதியளவு முதலாம் ரக மனிதர்களின் குணாதிசயத்தை கொண்டவர்கள். "என் வரையில் நான் மிகச் சரியாக இருப்பேன். நீ எப்படி வேண்டுமானால் இருந்து கொள். கரெக்டாக இருந்தால் உனக்கு நல்லது. இல்லையெல் எனக்கொன்றும் இல்லை. உனக்கு தான் கஷ்டமும், நஷ்டமும்," என்கிற மனோ நிலையில் வாழ்கிறவர்கள்.

யோசிக்கையில் உலகில் இவர்கள் தான் மிக மிக சந்தோஷமாய் மன மற்றும் உடல் ஆரோக்யத்துடன் டென்ஷன் இன்றி இருப்பதாக தோன்றுகிறது. வெற்றி பெற்ற பல மனிதர்களின் அடிப்படை குணாதிசயம், இந்த ரகத்தை சார்நததாகவே உள்ளது. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே... இது சில நேரம் முறையற்ற கருத்தாக இருந்தாலும் - நம் கடமையை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும் என்கிற அடிப்படை உள்ளதே.

சம்பளம் கொடுக்காத முதலாளிகளை பார்த்து இவர்கள் கோபிப்பதில்லை. "என்னை வேலைக்கு வைச்சுகிட்டா உனக்கு தான் நல்லது. வேணாம்மா... இன்னொரு இடம் பார்த்துகிறேன்," என்று போய் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கை துணையே கூட சரியாக அமையா விட்டால் கூட கவலையே படமாட்டார்கள். வாழ்க்கை துணை பற்றியே கவலை படாதவர்கள், வாழ்க்கை துணையின் சமையல் குறித்தா கவலைப்படுவார்கள்.

தன்னிடம் பணிபுரிபவன் சரியாக இல்லை என்றால், நான்கு தடவை சொல்லி பார்ப்பார்கள், பிறகு இடத்தை காலி பண்ணுங்க சார் என்று நோகாமல் பேசி அனுப்பி விடுவார்கள். இந்த மனோபாவம் கொண்ட மனிதர்களை வாழ்க்கை துணையாக அமைய பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவருக்கு பெற்றோராய் இருப்பவர்கள், இவருக்கு பிள்ளைகளாய் பிறந்தவர்கள் பாக்யசாலிகள். இவர்களால் பிறருக்கு இடைஞ்சல் இருப்பதில்லை. பிறரிடம் இருந்து இடைஞ்சல் வருவதையும் இவர்கள் விரும்புவதில்லை. இவரை நண்பராக பெற்றவர்களும் அதிர்ஷ்டசாலிகளே.

மூன்றாம் ரக மனிதர்களை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், "நரகத்துக்கு போவதும், இவரோடு சேர்ந்து வாழுவதும் ஒன்று" எந்தவொரு விஷயத்திலும் இவர்கள் சரியாக இருக்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இரண்டாம் ரக மனிதர்களுக்கு முற்றிலும் நேர்மாறாக இருப்பவர்கள், இவர்கள். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இப்படி சொல்வார். "பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்," என்று. மூன்றாம் ரகத்தவர் இந்த ரக மனிதர்கள். நல்ல குடும்பத் தலைவராக இருக்க மாட்டார்கள். ஆனால் மனைவி சிறப்பானவளாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் தகுதியை மறந்து ஆகாசத்தில் கோட்டை கட்டுவார்கள். இவர்களுக்கு மனைவியாக அமைந்தவர்கள் அல்லது கணவனாக அமைந்தவர்களின் வாழ்வு திண்டாட்டம் தான்.

இவர்களோடு வாழவே முடியாது. விவாகரத்து வழக்குகளில் முக்கால்வாசி இவர்களுடையதாகவோ அல்லது இவர்களை வாழ்க்கை துணையாக பெற்றவர்களுடையதாகவோ இருக்கும். பனிரெண்டு மணி நேர உழைப்பை வேலையாளிடம் உறிஞ்சி விட்டு, பத்து ரூபாய் கொடுக்க ஆயிரம் கேள்வி கேட்பார்கள். இவர்களிடம் எவராலும் பணி செய்ய முடியாது. இவர்களாலும் யாரிடமும் பணி செய்ய முடியாது. யாரும் இவரை வேலைக்கு வைத்து கொள்ளவும் மாட்டார்கள். நிறைகள் தெரியாது. குறைகள் மாத்திரமே தெரியும். இவர்களுக்கு பிள்ளைகளாக இருப்பதும் சிரமம். இவர்களுக்கு அப்பா, அம்மாவாக இருப்பதும் சிரமம்.

நான்காவது ரகத்தவர்கள் நகைசுவை உணர்வு கொண்டவர்கள். எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்கள். இவர்களின் இந்த கவலை இல்லாத சுபாவமே, இவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு கவலையை தரும். இப்படி குடும்ப கஷ்டமோ, கவலையோ தெரியாம்ம இருக்காரே என்று. யாரிடமும் வாங்கிய பத்து ரூபாயை கொடுக்க மாட்டார்கள். அதே சமயம் பிறருக்கு கொடுத்த பத்து ரூபாயை கேட்கவும் மாட்டார்கள்.

இவரை புத்திசாலி என்பதா அல்லது ஞானக்கிறுக்கன் என்பதா? - பிறருக்கு குழப்பமாக இருக்கும். அதாவது அவரும் சரியாக இருக்க மாட்டார். பிறரும் சரியாக இல்லா விட்டால் வருத்தப்பட மாட்டார். மார்க் சரியாக பிள்ளைகள் வாங்கவில்லை என்றால், "விடுடா அடுத்த பரிட்சை நல்லா எழுது," என்பார்கள். மனைவி சமையல் குறித்து அதிகம் அலட்டி கொள்ள மாட்டார்கள். இதே சுபாவம் பெண்ணுக்கு இருப்பின், கணவனின் குறைகளை பெரிசுபடுத்த மாட்டாள்.

எதிர்பார்ப்பு அதிகம் இல்லாதவர்களாய் இருப்பார்கள். வறுமை சூழல் நிலவினாலும, அதற்காக பெரிசாக அலட்டி கொள்ள மாட்டார்கள். முதலாம் ரக மற்றும் மூன்றாம் ரக மனிதர்களை பார்த்தால் இவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். மன உளைச்சல் அற்றவர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அதை கஷ்டமாக நினைக்காதவர்கள். இவர்களை வேலைக்கு வைத்து கொள்வதில் சில நன்மைகளும் உள்ளன. சில தீமைகளும் உள்ளன. சம்பளம் சரியாக தராவிட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்ப்பார்கள். ஆனால், எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விட்டு விடுவார்கள். இவர்களோடு மிகச் சரியாக வாழும் மன நிலை கொண்டவர்கள் வாழுவது சிரமம் தான். ஆனால் வாழ்ந்து விடுவார்கள். பிறர் மதிக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.

பிறரை மதிக்க வேண்டுமே என்றும் நினைக்கமாட்டார்கள். யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள். குதர்க்க புத்தி இல்லாதவர்கள்.

ஆக... நான்கு வகை மனிதர்களின் குணாதிசய சாரம்சம் இவை தான். நான் எடுத்து வைத்துள்ள மையக் கருத்து சரி தானே?

சனி, 28 மார்ச், 2009

  • விஜய் &பிரபுதேவா அவர்களின் அடுத்த காவியம் வரான் வரான் பூச்சாண்டி ,இது தரியலர் தாங்னா

சனி, 28 பிப்ரவரி, 2009

நகுலனின் பத்துக் கவிதைகள்

 எனக்கு விருப்பமான பத்து நகுலன் கவிதைகள் இவை.

1)


வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

***
2

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.

***

3

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

***

4

அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
 
***
5


தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது � அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் � இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்

***

6

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

**

7

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

**
8

அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.

*

9

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
*

10)

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.

***

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

நுறு டாலர்

ஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்
நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது(நம்புங்க ப்ளீஸ்), என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தி தரதரன்னு என் சேரை இழுத்து, உன் கிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லனும் என கிசுகிசுப்பான குரலில் சொன்னதும் எனக்கு ஒரே யோசனையா போச்சு. என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு நானும் சீரியசா பதில் சொல்ல நினைத்தாலும், பின் விளைவுகளை எண்ணி கப்சிப்னு விஷயத்துக்கு காது குடுத்தேன்.விஷயம் ரொம்ப சிம்பிள். இந்த சைட்டுல போய் நம்ம ஈமெயில் ஐடிய குடுத்தா அவங்க ஒரு மெயில் அனுப்புவாங்களாம். நாம நல்ல பிள்ளையா அவங்க கிட்ட ரிஜிஸ்டர் பண்ணிகிட்டோம்னு வைங்க, அவங்க ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது ரெண்டு மெயில் அனுப்புவாங்களாம். அதுல இருக்கற விளம்பர லிங்கை கிளிக் பண்ணிட்டு ஒரு நாப்பது செகண்ட் பொறுமையா இருக்கனுமாம். (அந்த நேரத்துல இரண்டு பதிவு படிச்சிரலாம்).எங்க லிங்கை கிளிக்கினதுக்கு ரொம்ப நன்றி, இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம். அட, இது என்ன நோகாம நொங்கு திங்கற வேலையா இருக்கே!ன்னு நானும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. இதோ படம் போட்டு பாகம் குறிச்சு இருக்கேன் பாருங்க:
நாம இப்படி கஷ்டப்பட்டு(?) சம்பாதிச்ச பணத்தை(?) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம். என்னவோ போங்க, ஆப்ரிக்காகாரன் அவங்க ஊர் பாங்குல லட்சகணக்கான டாலர்களை என் பெயரில் மாத்தி எழுதட்டுமான்னு தினமும் மெயில் விடு தூது விட்டுட்டு இருக்கான். அடுத்தவன் பணம் நமக்கெதுக்கு?ன்னு நானும், வேணாம் ராசா! நீயே வெச்சுக்கோன்னு சும்மா இருக்கேனாக்கும்.இவங்க சொன்ன மாதிரி டாலர் செக் அனுப்புவாங்களா இல்லாட்டி வட பழனி முருகன் டாலர் அனுப்புவாங்களா?ன்னு இனிமே தான் தெரியும். :)

உயிரோட்டம்

10.2.09

உயிரோட்டம்
அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் ராமனாதன் என்று ஒரு சிலர் விதிவிலக்கு. தன்க்குள்ளேயே நிறைய பேசிக்கொள்வான். அதற்கென சங்கதிகள் இருந்தன. தெரிந்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் கண் கலங்குவான. மகாநதி படம் பார்த்து பாதியிலேயே தாங்க முடியாமல் வெளியே வந்துவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக்கொண்டே இருப்பான. கொஞ்சம் இரக்கத்தோடும் நிறைய கேலியோடும் மற்றவர்கள் புறம் பேசுவது கேட்டாலும் கவலைப்பட்ட மாதிரி தெரியாது. ஒருதடவை டெல்லிக்கு டூர் போயிருந்தபோது போட் கிளப் எதிரே அந்த பெரிய சாலையில் ஒரு குதிரை நொண்டிக்கொண்டு போன காட்சியின் துயரமான சாயல் ஒரு வருசம் கழித்து வந்த அவனது கனவில் இருந்தது. இன்னமும் குழந்தை முகம் அப்படியே இருக்கிறதென்று என்பது பலரால் அவனைப் பற்றி ஆச்சரியமாய் சொல்லப்படக்கூடிய செய்திகளில் ஒன்று. இவன்தான் நமது அழகப்பன்.

இந்த மாசம் ஆறாம் தேதியிலிருந்து இவனுக்கு கேஷியராக பணியாற்றும் சந்தர்ப்பம் வந்தது. கரன்ஸி என்பது கரண்ட் மாதிரி....அதிஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஷாக் அடித்துவிடும். உஷாராய்த்தான் இருந்தான்.

சதா நேரமும் மனிதர்கள் கவுண்டருக்கு வெளியே காத்திருந்தார்கள். பணம் வாங்குவதற்கோ அல்லது செலுத்துவதற்கோ. ‘அமிர்தா ஐ லவ் யூ’ எழுதப்பட்ட நோட்டும் இடையில் வரும். லேசாய் சிரித்துக்கொண்டு இதை எழுதியவனுக்குப் பிறகு எத்தனை கைகள் இது மாறியிருக்கும் என்றும் அந்த அமிர்தா எப்படி இருப்பாள் என்றும் நினைப்பதுண்டு. ஏன் அந்த அமிர்தா இந்த நோட்டை பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து தொக்கி நிற்கும். ஒரு நோட்டை எண்ணுகிற எத்தனையாவது நபராகத் தான் இருப்போம் என்று எண்ணி பிரமித்துப் போவான். ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. பழகும் இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் கூட அங்கங்கு வணக்கம் சார் என்பதும், பெட்ரோல் தீர்ந்த கடைசி தினங்களில், ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் சமயங்களில் “ஸார்... வர்றிங்களா... பேங்க்ல டிராப் பண்றேன்”: என்று ஒன்றிரண்டு தடவை முகம் பார்த்தவர்கள் கூட வந்து கேட்பதும் நிகழலாயிற்று. தனக்குக் கொஞ்சங்கூட சொந்தம் இல்லாத பணம் தருவிக்கிற மாய மரியாதை கண்டு சிரித்துக் கொண்டான்.

வெளியே நிற்கும் மனிதர்களின் முகங்களும் விரல்களுமே தெரிகிற மாதிரி சுற்றிலும் தன்னை அடைத்து வைத்திருந்தது பாதுகாப்பிற்கு பதிலாக பயத்தையே தந்தது. போதாக்குறைக்கு தன் பொருட்டு துப்பாக்கியுடன் ஒரு காவலாளி வாசலில் நின்று வருவோர் போவோரையெல்லாம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது நடுக்கத்தை உண்டு பண்ணியது. உள்ளங்கை அடிக்கடி குளிர்ந்து போனது.

இரண்டாம் நாளே ஷக் அடித்து விட்டது. ஒரு ஐம்பது ருபாயைக் கோட்டை விட்டுவிட்டான். எண்ணி வாங்குவதிலோ, கொடுப்பதிலோ தப்பு நடந்திருக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை. தனது பையிலிருந்து கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவ்வப்போது பெருமாள்சாமி உள்ளே வருவது கூட பயம் தர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்திற்காக தன்னையே நொந்து கொண்டாலும் ‘ஜாக்கிரதை’, ‘ஜாக்கிரதை’ என ஒரு சத்தம் கடிகார முள்ளாய் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருதடவைக்கு இரண்டு தடவை நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தான். புதுநோட்டாய் இருந்தால் விடைப்பாய் இருக்கும். சடசடவென்று எண்ண முடிகிறது. பழைய நோட்டுக்கள் தங்கள் தீராத பயணத்தில் நைந்துபோய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டு லேசில் வராது. நிதானமாய் பிதுக்கி பிதுக்கி எண்னினான். கஸ்டமர்களை இப்படி காக்க வைக்கிறானே என மேனேஜருக்கு வருத்தம் வந்தது.

நான்காம் நாள் இவனுக்கு அது நேர்ந்தது. முதலில் வலதுகை பெருவிரலிலும், நடுவிரலிலும் நமைச்சல் ஏற்பட்டது. சும்மா உட்கார்ந்து இருக்கும்போது தடவிக்கொள்ள வைத்தது. ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்வதில் ஒரு சுகம் இருந்தது. அந்த நேரங்களில் ஒருமாதிடி இடதுபக்கம் கடித்துக்கொள்வதும் பழக்கமாகி, இந்த இயக்கம் ஒரு அணிச்சை செயலாகவே மாறிப்போனது. தொடர்ந்து சில நாட்களில் காந்தலெடுக்க ஆரம்பித்த போது தடவிக் கொள்ளவும், ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அந்த விரல்களின் ஓரங்களில் வெடிப்புகள் வந்திருந்தன. சாப்பிடும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. முதன்முதலாய் அது குறித்து கவலைப்பட ஆரம்பித்தது அப்போதுதான். தனிமைகளில் தன் விரல்களைப் பார்த்து அருவருப்படைந்தான். பயமாகவும் இருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடமாடினான். பணம் எண்ணி வாங்கவும், கொடுக்கவும் சிரமமாயிருந்தது. அந்தச் சின்னப் புண்களின் ரணம் பண நோட்டுக்கள் எல்லாவற்றிலும் பட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் டாக்டரை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

டாக்டர் சற்குணத்தின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ருபாய் கூட வாங்கிக் கொள்வார். இலக்கியம் பேசுவதற்கென்று சில பேர் வருவார்கள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடந்த ஊழல் பற்றி ஜூனியர் விகடனுக்கு தகவல் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அழகப்பனை பார்த்ததும் “வாங்க... வாங்க...” என முகம் மலர்ந்து வரவேற்றார். உற்சாகமாய் பார்த்தார். இவன் சந்தேகப்பட்டதையே ஊர்ஜிதம் செய்தார். பண நோட்டுக்களையே உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றார். இவனுடைய தோல் எந்த அசுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சென்ஸ்டிவ் ஆக இருப்பதாகவும், உள்ளங்கை குழந்தையின் மென்மையாக இருப்பதாகவும் சொன்னார். அதில் இவனுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.

ஆயின்மெண்ட்டும், சில மாத்திரைகளும் எழுதிவிட்டு கேஷ் கவுண்டரில் இனி உட்கார வேண்டாம் என புத்திமதியையும் சேர்த்துத் தந்தார். எத்தனையோ வியாதிஸ்தர்களை கவனிக்கும் இவருக்கு இதுமாதிரி வரவில்லையே என்ற நினைப்பும் அந்த நேரத்தில் அழகப்பனுக்கு ஒருபுறம் ஓடத்தான் செய்தது. அதைப் புரிந்து கொண்டவரைப் போல “வேணும்னா கிளவுஸ் போட்டுட்டு கேஷ் பாருங்க..” என்று சிரித்தார். டாக்டரின் கிண்டலில் முகம் சுருங்கித்தான் வெளியே வந்தான்.

மேனேஜரிடம் கையில் காயம் பட்டிருக்கிறதென்று சொல்லி இரண்டு நாட்கள் பெர்மிஷன் வாங்கிக் கொண்டான். கேஷ் கவுண்டரை விட்டெ வெளியே உட்கார்ந்து மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பேனாவையும் அந்தப் பெருவிரலாலும், நடுவிரலாலும்தான் முக்கியமாய்ப் பிடித்து எழுத வேண்டியிருந்தது. வழக்கம் போல எழுத முடியவில்லை. எழுத்துக்களும், எண்களும் வித்தியாசமாய்த் வந்தன. கடுமையாகத் தொந்தரவு செய்யப்பட்டான். நேரே மேனேஜரிடம் போய் இரண்டு நாள் கேஷூவல் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் இந்த சதாசிவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தன்னிடம் இதுபற்றி என்று முணுமுணுத்துக் கொண்டான்.

டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை அவ்வப்போது போட்டுக் கொண்டான். “ஏங்க...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் கேஷ் பாக்கணுமா” என்றாள் இவன் அருமை மனைவி. வலது தாடை புடைக்க பற்களைக் கடித்து அவளை முறைத்தான். உலகத்தில் எவ்வளவோ கேஷியர்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் இப்படி நேர்ந்து விட்டதே என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்குத் தெரியாது. பிறகு அவள் இது சம்பந்தமாய் வாயைத் திறந்து பேசியதே இல்லை. அவ்வப்போது இரக்கம் சிந்துகிற பார்வையை மட்டும் வீசுவதோடு சரி. இந்த கேஷ் ஷெக்‌ஷன் தொடர்ந்து பார்த்த சதாசிவம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆன போது உள்ளூர ஒரு சந்தோஷம் வந்தது. அதற்காக வெட்கப்படவும் செய்திருக்கிறான். இப்படியெல்லாம் ஆகும் என நினைத்துப் பார்க்கவில்லை.

இரண்டு நாட்களில் விரல்களில் அந்த இடம் காய்ந்து போயிருந்தது. மீண்டும் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து விட்டான். பழைய நோட்டுக்கள் உள்ளே வரும்போதெல்லாம் கொண்டு வருபவரை மகா வெறுப்புடன் பார்த்தான். அவர்களோ ரொம்ப சோகமாய் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டிருப்பது மாதிரி இருந்தது. நோட்டுக்களை எண்ணும்போது இவனது விரல்களையே அவர்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவ்வபோது நமைச்சல் இருந்த மாதிரி இருந்தது. ஜாக்கிரதையாகி பாத்ரூம் போய் கைகழுவி வந்தான். ஆனாலும் நமைச்சல் இருப்பது மாதியே இருந்தது. இல்லை... இதெல்லாம் பிரமையெனவும் தேற்றிக் கொண்டான். மேலும் சந்தேகம் வலுப்பட்ட போது டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை பாதுகாப்பிற்காக அன்றிரவு விரல்களில் போட்டுக் கொள்வான். மனைவியையும், குழந்தைகளையும் தொடாமல் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொள்வான். இவனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்த மாதிரி மனைவிக்குத் தெரிந்தது.

ஒரு மாதிரியான நாற்றம் நோட்டுக்களிலிருந்து வீசிக்கொண்டு இருந்தது. பலசமயம் மக்கிப் போய் முகத்தில் அடிக்கிற மாதிரியும் இருக்கும். விபூதி வாசம் வீசும். அடுத்த நோட்டிலேயே மீன்வாசம் அடிக்கும். குறிப்பாக ஐந்து ருபாய், பத்து ருபாய், இருபது ருபாய் நோட்டுக்களில் இந்த நாற்றம் அதிகமாய் இருந்தது. இரண்டு ருபாய்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே பிய்ந்து விடும் போல இருந்தன. இந்த நோட்டுக்களைக் கொண்டு வருபவர்களை எதாவது ஒரு காரணம் காட்டி எரிந்து விழுந்தான். ஐம்பது, நூறு, ஐநூறு என்றால் எளிதாக இருக்கும். ரொம்ப நேரமும் எண்ண வேண்டியிராது. யாராவது சில்லறை கேட்டு வந்தால் இந்த பாவப்பட்ட நோட்டுக்களை முதலில் வெளியே தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினான். சாப்பிடும்போது நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவினான். ஒவ்வொரு நாளும் கணக்கை முடிக்கும் போது பணம் எதுவும் குறைந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது.

அந்த மாசச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல கூட கிடைத்தது. கேஷ் பார்த்ததற்கான அலவன்சு. சந்தோஷமாய்த்தான் இருந்தது. மாசக் கடைசியில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் அவள் என்ன கணக்கு வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. இதைப் பார்த்ததும் உற்சாகமாவாள் என நினைத்துக் கொண்டான். வீட்டில் நுழைந்ததும் எப்போதும் “அப்பா” என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்கிற குழந்தை படுத்திருந்தது. “எதுவும் சாப்பிடல...ஒரே வாந்தி....” மனைவி பரிதவித்தாள். குழந்தையை அள்ளிக் கொண்டு அவசரமாய்ப் புறப்பட்டார்கள்.

டாக்டர் சற்குணம் பதற்றப்படாமல் குழந்தையை கவனித்தார். அவரைப் பார்த்ததும் குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். “நல்ல பையன்ல...அழக்கூடாது...என்ன...ம்..அப்புறம் மிஸ்டர்..” இவனைப் பார்த்து சிரித்தார். “ஒண்ணுமில்ல...சாதாரண அலர்ஜிதான்.... அப்புறம் இந்தப் பக்கம் வரவேயில்ல.... எப்படியிருக்கீங்க. ஒங்க விரல்லாம் எப்படி இருக்கு?” பேசிக்கொண்டே போனார். ”சரியாப் போச்சு” என்றான். குழந்தையிடம் இருந்து திரும்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் குழந்தையை பரிசோதித்துக் கொண்டே “இப்போ கேஷ் ஷெக்‌ஷன் நீங்க பாக்கலையா?” என்றார். “பார்க்கிறேன்” என்றான். டாக்டர் “அப்படியா” என்று அவனைப் பார்த்தார். முகத்தில் நிலைத்த அவரது கண்களில் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. பிறகு குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் சொன்னது எதையும் மனது வாங்கிக் கொள்ளவில்லை. எதோ ஒரு இருட்டு அவனைக் கவ்விக் கொண்டு இருந்தது. சகலமும் அணைந்து போனவனாய் காணப்பட்டான். வீட்டுக்கு வரும்போது குழந்தை அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தான்.

இவனுக்குத் தூக்கம் வரவில்லை.வராண்டாவில் போய் உட்கார்ந்தான். பாராக்காரனின் விசில் சத்தம் இருட்டின் குரலாக கேட்டுக் கொண்டிருந்தது. மரங்கள் அசையாமல் புழுக்கமாயிருந்தது. திரும்ப உள்ளே வந்தான். படுத்துக் கொண்டான். ஏன் இதற்காகவெல்லாம் தவிக்க வேண்டும் என்றாலும் விடுபடமுடியாமல் இருந்தான். ஒரு நேரத்தில் தூக்கமும் வந்தது. இவனது விரல்கள் மெல்ல மெல்ல அழுகிப் போயின. பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொன்றாய் கையிலிருந்து உதிர்ந்து கொண்டன. விழுந்தவை தரையில் பல்லியின் வால்களாய் துடித்தன. என்னமோ சத்தமாய்ச் சொல்லி எழுந்து உட்கார்ந்தான். மிரண்டு போயிருந்தான். படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது.

“என்னங்க...” அவள் தூக்கக் கலக்கத்தோடு லேசாய் இவனை விழித்துப் பார்த்தாள். பால் குடித்த பழக்கத்தில் பையன் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தான். இவன் எழுந்து போய் தண்ணீர் குடித்தான். படுக்கவே பயமாயிருந்தது. படுக்கச் சொல்லி அவள் இவன் மீது கைகளைப் போட்டுக் கொண்டாள். தட்டிக் கொடுத்தாள். அவளது விரல்களை தன்னுடைய விரல்களில் கோர்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. விரல்கள் இப்ப்போது வெதுவெது என்றிருந்தன.

*
பி.கு:
1. இந்தக் கதை 1996ல் வெளியானது.
2. சென்னை சாகித்ய அகாடமியில் இந்தக் கதையை வாசித்தேன். எதிரே எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திரா பர்ர்த்தசாரதி, சா.கந்தசாமி, பொன்னீலன் உட்பட பல எழுத்தாளர்கள் அமர்ந்திருந்தனர். வாசித்து முடிந்ததும், இந்திரா பார்த்தசாரதி கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினார். கூடவே செம்மலரில் இப்படிப்பட்ட கதைகளையும் போடுகிறார்களா என்றார்.

நான் கடவுள்

நான் கடவுள் படம் பார்த்தேன் தியேட்டரில் இல்லை ,ஆன்லைன் தான் பார்த்தேன் எனென்றால் சிகாகோவில் அடுத்த வாரம் தான் ரிலிஸ் என்னால் முன்று வருடம் காக்கமுடிந்ததுஆனால் ஒரு வாரம் பொறுக்க முடியவில்லை படத்திற்கு வருவோம் பாலாவின் முன்றைய மூன்று படங்களை விடவும் இது சிறப்பாக உள்ளது , இளையராஜா வின் இசை முக்கியமானது பாடல்கள் ஏற்ற இசையும் படத்தொகுப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது.ஆர்யா,புஜாவின் நடிப்பு பிரமாதம் தமிழ் சினிமாவின் தரத்தை இந்த படத்தின் முலம் அறியலாம் பாலாவிற்கு எனது வாழ்த்துக்கள்

நான்

நான் என்பது என்ன என்று பல முறை யோசித்துவிட்டேன் புலப்படவில்லை